மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் இப்போது வரலாறு காணாத வெப்பம் படுத்தி எடுத்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் மொத்தமாக தாங்கள் வேலை செய்யும் முறையை மாற்றிக் கொண்டுள்ளனர். வெயில் உச்சத்தில் இருக்கும் நேரத்திற்குப் பதிலாக இரவு நேரங்களில் வேலை செய்யும் முறைக்கு மெல்ல மாறி வருகிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக அங்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட நம்ம ஊரில் கோடையில் அடிக்கும் வெயிலை விட இது கம்மி தான் என்றாலும் அந்த ஊர் மக்களுக்கு இது முற்றிலும் புதியது. இதனால் அங்கு மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள்.
இரவு ஷிப்ட் அங்குள்ள அரசுகள், நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது பாரம்பரிய வேலை நேரங்களைக் கூட மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாகக் கட்டுமானம் உள்ளிட்ட அவுட்டோர் வேலை செய்யும் தொழிலாளர்களைப் பகல் நேர வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக, பல ஐரோப்பிய நாடுகளில் இரவு நேரம் அல்லது அதிகாலை நேரமே இவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். கட்டுமானத் துறை, சாலைப் பராமரிப்புப் பணிகள், விவசாயம் மற்றும் டெலிவரி சேவைகள் போன்ற துறைகளே இந்த கடுமையான வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைக் கடந்து பதிவாகி வருவதால், நீண்ட நேரம் வெளியில் நின்று வேலை செய்வது தொழிலாளர்களின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது. இதனால் நீரிழப்பு, மயக்கம் மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க பல நிறுவனங்கள் தங்களது பணி நேரத்தை மாற்றி அமைத்து வருகின்றன.









